Advertisement
அரசியல்சமூகம்செய்திகள்தகவல்

இதுவரை பெறப்பட்ட நன்கொடை 69 கோடி: மருந்து, ஆக்ஸிஜன் வாங்க 50 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடைகளிலிருந்து, கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கிட திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்.

Advertisement

மருத்துவ நெருக்கடியும் – நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அவர்கள் 11-5-2021 அன்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

நேற்று (17-5-2021) வரை இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என, மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு (cmprf) அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.