
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு:
22.05.2018 அன்று நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரிக்க திருமதி. அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.
14.05.2021 ஆணையத்தின் இடைக்கால ஆணை பெறப்பட்டது. ஆணையத்தின் அறிக்கை விரைவாக பரிசீலிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய குற்ற புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்ட, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
சம்பவத்திற்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட 93 நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், ஒருவர் சிறையிலேயே இறந்துவிட்டதால் வாழ்வாதாரம் இழந்துள்ள அவருடைய தாயாருக்கு இரண்டு லட்ச ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
கைது செய்யப்பட்டவர்களின் உயர்கல்வி – வேலை வாய்ப்புக்காக தடையில்லாச் சான்று அளிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.