டவ்-தே புயலில் காணாமல் போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரண நிதி – முதலமைச்சர்

“டவ் தே” புயலில் காணாமல் போன நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர் குடும்பத்திற்கு தலா ரூ.20,00,000/- வீதம் ரூ.4.20 கோடி நிவாரண உதவி – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு

கடந்த 13.05.2021 அன்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் “டவ் தே” புயல் குறித்து வெளியிட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதன் காரணமாக, அரபிக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 246 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளன. இருப்பினும், கீழ்கண்ட 2 நிகழ்வுகளில் 21 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாக தகவல் பெறப்பட்டது.

1) நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த IND-TN-06-MM- 5517 (முருகன் துணை) பதிவெண் கொண்ட படகு, இலட்சத்தீவிற்கு அருகே கடலில் மூழ்கியதாகவும் அதிலுள்ள ஒன்பது மீனவர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது.

காணாமல் போன 9 மீனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து மூழ்கிய படகு மற்றும் 9 மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மீட்புப்பணியில் இந்திய கடலோர காவற்படையின் கப்பல் “விக்ரம்” மற்றும் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் இலட்சத்தீவு நிர்வாகியின் ஒரு ஹெலிகாப்டரும் காணாமல் போன மீனவர்களை தேடுதல் பணியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கடலில் மூழ்கிய “முருகன் துணை” பெயர் கொண்ட திரு.மணிகண்டன், என்பவரது மீன்பிடி படகுடன் ஒன்றாக சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 2 மீன்பிடி விசைப்படகுகளில் சென்ற 23 மீனவர்களும் காணாமல் போன 9 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடித்திட இயலவில்லை.

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த திரு.சபிஷ், என்பவருக்கு சொந்தமான அமீர் ஷா என பெயர் கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண் IND-KL-07-MM-4989 ல் 05.05.2021 அன்று 16 மீனவர்களுடன் கேரள மாநிலம் பைபோர் (Beypore) மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றதாகவும், 16 மீனவர்களில் 12 மீனவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் “டவ் தே” புயல் கடந்த பின்பு அவர்கள் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் பெறப்பட்டது. முன்னதாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காணாமல் போன 21 மீனவர்களை தீவிரமாக தேடிக் கண்டுபிடித்து மீட்கக் கோரி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார்கள்.

“டவ் தே” புயல் காரணமாக காணாமல் போன நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் (மொத்தம் 21 மீனவர்களும் மீன்பிடி தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டவர்கள் என்பதாலும், காணாமல் போன மீனவர்களை ஆழ்கடலில் இதுவரை ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவற்படையின் கப்பல் மூலம் 15.05.2021 முதல் இதுவரை தொடர்ந்து தேடப்பட்டும் 21 மீனவர்களையும் கண்டுபிடித்திட இயலாத நிலை உள்ளது.

எனவே “டவ் தே” புயல் காரணமாக காணாமல் போன 21 மீனவர் குடும்பங்களின் வறிய நிலையினை கருத்தில் கொண்டு மேற்கண்ட காணாமல் போன மீனவர்களது வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.20 இலட்சம் என்ற முறையில் ரூ.4.20 கோடி நிவாரணத் தொகையாக 21 மீனவ குடும்பங்களுக்கு வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

Exit mobile version