ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல்,டீசல் விலை: மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு! | Filed case against petrol minister

நாடு முழுவது பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ₹100 ஐ கடந்துள்ளது டீசல் விலையும் ₹100 ஐ தொடும் நிலையில் உள்ளது. இது பொதுமக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது தமிழ்நாட்டில் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கியுள்ளது தெலங்கானாவில் 102 ரூபாயை  கடந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

இந்தியாவின் தேவையில் 80 சதவீத எரிபொருட்களை இறக்குமதி செய்வதால்தான் அவற்றின் விலை அதிகரித்துக் காணப்படுவதாக எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  தமன்னா ஹாஸ்மி என்பவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக  மத்திய பெட்ரோலிய அமைச்சர்  தர்மேந்திர பிரதான் மீது பீஹார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னதாக, கொரோனாக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக மக்களை தவறாக வழிநடத்துகிறார் என பதஞ்சலி நிறுவனம் பாபா ராம்தேவ் மீதும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது, முசாபர்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அத்தியாவசிய தேவையான எரிபொருட்களின் விலை உயர்வு மக்களை அச்சமும் கோபமும் அடைய செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோசடி, குற்றம் செய்ய முயற்சித்தல், வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள் தொடர்பான பிரிவுகளின் கீழ் தர்மேந்திர பிரதானுக்கு  எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று தமன்னா ஹாஸ்மி கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version