முதல்வரிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க முதல்வரின் தனிப்பிரிவு (CM Special Cell) இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் பல்வேறு திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறார். தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண தொகை ரூ.4000, இலவச அரிசி மளிகை பொருட்கள் தொகுப்பு, செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை மற்று உதவித்தொகை, முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து, பெண்களுக்கு இலவச நகரப்பேருந்து பயணம் என பல்வேறு அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியீட்டு அதிரடி காட்டி வருகிறார்.
அதேபோல் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக புதிதாக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அந்த இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.