நாட்படு தேறல்: பத்தாம் பாடல் “நாளை ஒரு பூ மலரும்” | ஒரு பார்வை
கவிஞர் வைரமுத்து நூறு பாடல்களை ” நாட்படு தேறல்” என்ற தலைப்பின் கீழ் வெளியிட உள்ளார் . ஒவ்வொரு பாடல்களுக்கான தனித்தனி இசையமைப்பாளர்கள் பாடகர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் என ஒரு பிரம்மாண்ட முயற்சியாக இப்பாடல்களை வெளிவர உள்ளன. அதாவது 100 பாடல்கள், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 இயக்குனர்கள் இந்த முயற்சியில் பங்கேற்றுள்ளனர்.
முற்றிலும் புதிய முயற்சியான நாட்படு தேறல் தொகுப்பின் முதல் பாடலான “நாக்கு செவந்தவரே” என்னும் பாடல் ஏப்ரல் 18ஆம் தேதி கலைஞர் டிவியில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு வாரம் ஒரு பாடல் என்ற விதத்தில் இதுவரை 10 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
நாட்படு தேறல் பத்தாவது பாடல்
ஒரு நாளில் மலர்ந்து மடியும் பூவின் பயணம் இப்பாடல் வரிகள்.
இசை : ராஜிவ் மேனன்
குரல் : உத்ரா உன்னிகிருஷ்ணன்
இயக்கம் : பார்த்த போர்கோய்ன்
பாடல் வரிகள்
நாளை ஒரு பூ மலரும்
நாலுதிசை வாசம் வரும்
சார்ந்துள்ள சூழலுக்கு சௌந்தரிய லகரி தரும்
தாவரங்கள் கைதட்டும் தாய்செடிக்குக்கொண்டாட்டம்
விண்மீன் போன்றதொரு
மண்மீன் நானென்று வான்வெளியை பார்த்து வண்ணமலர் கண்ணடிக்கும்
அழியும் பொருளோடு
அழியாத பேரழகு
சேர்த்தவிதம் எங்ஙனமோ தெய்வங்கள் உரையாடும்
சாயம் போன வாழ்வோடு சட்டென்று நிறமூட்டும் காற்றினைத் துவைத்து காயவைத்து மணமூட்டும்
வரிவண்டு பசியாற
வாவென்று தேனூட்டும் உண்டாடிய களைப்பாற உள்வீட்டில் மஞ்சமிடும்
குலமகளின் குழல்சேர்ந்தால் குலம்வளர்க்கும் பொருளாகும்
பூக்கூடை சேர்ந்தாலோ
பூக்காரி உணவாகும்
சந்நிதி சேர்ந்தாலோ
சாமிக்கு வரமாகும்
சருகாய்ப் போனாலும்
பூமிக்கு உரமாகும்
மணங்கொள்ளும் மேடையிலே
மங்கலத்தின் மணமாகும் படமாகும் வேளையிலே படைக்கின்ற சரமாகும்
சின்னஞ்சிறு பூ வோடு என்னென்ன பெருவாழ்வு நூற்றாண்டு வாழ்வோடு நமக்குண்டா பூ வாழ்வு
இவ்வாறான வரிகளை கொண்ட நாட்படு தேறலின் பத்தாவது பாடலை பார்க்காதவர்கள் கீழே பார்க்கலாம்.
Read also: கவிஞர் வைரமுத்துவின் நூறு பாடல்கள் தொகுப்பு -“நாட்படு தேறல்” ஒரு புதிய முயற்சி