COVID-19| கேரளா முதல் கர்நாடகா வரை ஊரடங்கை நீட்டித்த மாநிலங்கள் | தமிழ்நாடு?

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் இந்தியா தனது போரைத் தொடர்கையில், பல மாநிலங்கள் பரிமாற்றச் சங்கிலியை உடைக்க தங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவெடுத்துள்ளன. கோவிட் – 19 ஆல் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதால் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தற்போதைய முழு ஊரடங்கு காலம் நீட்டிக்கப்போவதாக அம்மாநில அரசுகள் நேற்று அறிவித்தனர்.

முழு ஊரடங்கை நீட்டித்த பிற மாநிலங்களின் பட்டியல் இங்கே:

கர்நாடகா: முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பின்னர், “நாங்கள் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம். அதில் நிபுணர்கள் கூறிய கருத்துப்படி தற்போது உள்ள ஊரடங்கு காலம் மே 24 வரை என்பதனை ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கிறோம்” என்றார். கட்டுப்பாடுகளில் எந்த மாற்றங்களும் இருக்காது, அதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம்: வைரஸ் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்த யோகி ஆதித்யநாத் அரசாங்கம், மே 24 ஆம் தேதி காலை 7 மணி வரை கால அளவை நீட்டித்துள்ளது. இது போன்று ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுவது ஐந்தாவது முறையாகும்.

டெல்லி: டெல்லியின் ஊரடங்கு மே 24, அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளம்பிங் மற்றும் எலக்ட்ரீஷியன் சேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும். டெல்லி மெட்ரோவும் மூடப்படாமல் இருக்கும்.

ஹரியானா: கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஹரியானாவில் முழு ஊரடங்கு மே 24 வரை நடைமுறையில் உள்ளது.

ஜம்மு-காஷ்மீர்: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 20 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 29 முதல் நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு இப்போது மே 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசம்: கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு மே 26 வரை நீட்டிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட்: மே 27 வரை பகுதி ஊரடங்கு அமலில் இருக்கும். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளின் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்ற இ-பாஸ்கள் மூலம் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

கேரளா: முதலமைச்சர் பினராயி விஜயனும் ஊரடங்கு மே 30 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார். ஆயினும், மூன்று மாவட்டங்களில் “மூன்று மடங்கு” விதிமுறைகளை கடுமையாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கடுமையான தடைகள் மலப்புரத்தில் தொடரும் என்றும் கூறினார்.

சத்தீஸ்கர்: கோவிட் -19 வழக்குகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மே 31 வரை நீட்டிக்குமாறு சத்தீஸ்கர் அரசு மாவட்ட நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா: மாநிலத்தில் ஊரடங்கு ஜூன் 1 ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளாக நோய் தொற்று அதிகம் உள்ள இடங்களில் இருந்து மாநிலத்திற்குள் நுழைவோருக்கு கட்டாய எதிர்மறை ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கை தேவை என்று அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தலைநகர் மும்பை கடந்த சில நாட்களில் 5,000 க்கும் குறைவான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

Lockdown in Tamilnadu

தமிழ்நாடு: ஊரடங்கு மே 24 வரை இருக்கும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனை குழுவுடனும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா நோய் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 36,000 ஐ கடந்து இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. முழு ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றாலும் மக்கள் உயிரைக் காப்பாற்ற இதுவே இறுதி ஆயுதம் ஆகும். ஆகவே ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது முதல்வர் நடத்தும் ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version