கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, தங்கும் விடுதி வசதி, மருத்துவ காப்பீடு, தினசரி தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை என பல திட்டங்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் அறிவித்துள்ளன. இதுபற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்கிட மாவட்ட அளவில், மாவட்ட சிறப்புப் பணிப் பிரிவு (Task Force) அமைத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிவது முதல் அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சி ஆகிய அனைத்தும் இந்த சிறப்புக் குழுவால் கண்காணிக்கப்படும்.
- பெற்றோரை இழந்து ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து (Fixed deposit), அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் போது வட்டியோடு வழங்கப்படும்.
- பட்டப் படிப்பு வரையிலான கல்வி – விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.
- கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
- உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, அவர்கள் 18 வயது வரையில் வழங்கப்படும்.
- ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் வைப்பீடு செய்யப்படும்.
- அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்; அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் சலுகைகள்:
“ஒரு சமூகமாக, நம் குழந்தைகளைப் பராமரிப்பதும், பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தூண்டுவதும் நமது கடமை.”
– பிரதமர் நரேந்திர மோடி
கோவிட் 19 காரணமாக பெற்றோரை இழந்த அல்லது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் / வளர்ப்பு பெற்றோரை இழந்த அனைத்து குழந்தைகளும் ‘குழந்தைகளுக்கான PM-CARES’ (PM-CARES for Children) திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படுவார்கள்.
குழந்தையின் எதிர்காலத்திற்கான ஆதரவு:
- பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் குழந்தையின் பெயரில் ரூ. 10 லட்சம் வைப்புத் தொகையாக (Fixed deposit) வைக்கப்படும்.
- அந்த குழந்தை 18 வயதை அடைந்ததிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை வழங்கப்படும். இது உயர் கல்வி காலத்தில் அவரது தனிப்பட்ட தேவைகளை கவனித்துக்கொள்ள உதவும்.
- 23 வயதை எட்டும் போது அவர் அந்த வைப்புத் தொகையின் மொத்த பணத்தையும் தனிப்பட்ட அல்லது தொழில்முறை பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளலாம்.
10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பள்ளிக் கல்விக்கான ஆதரவு:
- 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை மத்திய அரசு நடத்தும் கேந்திரியா வித்யாலயா அல்லது ஒரு தனியார் பள்ளியிலோ சேர்த்துக் கொள்ளலாம்.
- குழந்தையை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தால், RTE விதிமுறைகளின்படி PM CARES ல் இருந்து கட்டணம் வழங்கப்படும்
- இதர செலவினங்களான சீருடை, புத்தகங்கள் மற்றும் நோட்புக்குகள் ஆகியவற்றிற்கும் PM-CARES பணம் செலுத்தும்.
11 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான பள்ளிக் கல்விக்கான ஆதரவு:
- மத்திய அரசு நடத்தும் குடியிருப்பு வசதி கொண்ட அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கை வழங்கப்படும். (Residential Schools: சைனிக் பள்ளி, நவோதயா வித்யாலயா முதலியன)
- ஒருவேளை குழந்தையை கார்டியன் / தாத்தா, பாட்டி / உறவினர் குடும்பத்தின் பராமரிப்பில் தொடர வேண்டும் என்றால் அருகிலுள்ள கேந்திரியா வித்யாலயாவில் அல்லது ஒரு தனியார் பள்ளியில் தினமும் வந்து செல்பவராக (Day Scholar) சேர்த்துக்கொள்ளலாம்.
- குழந்தையை ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தால், RTE விதிமுறைகளின்படி PM CARES ல் இருந்து கட்டணம் வழங்கப்படும்
- இதர செலவினங்களான சீருடை, புத்தகங்கள் மற்றும் நோட்புக்குகள் ஆகியவற்றிற்கும் PM-CARES பணம் செலுத்தும்.
உயர் கல்விக்கான ஆதரவு:
- தற்போது உள்ள கல்வி கடன் விதிமுறைகளின்படி இந்தியாவில் உள்ள தொழில்முறை படிப்புகள் / உயர் கல்விக்கான கல்விக் கடனைப் பெறுவதற்கு உதவப்படும். இந்த கடனுக்கான வட்டி PM CARES ஆல் செலுத்தப்படும்.
- மாற்றாக, இளங்கலை / தொழிற் பயிற்சி கல்வி கட்டணம் / பாடநெறி கட்டணங்களுக்கு சமமான உதவித்தொகை மத்திய அல்லது மாநில அரசின் கீழ் அத்தகைய குழந்தைகளுக்கு அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும். தற்போதுள்ள உதவித்தொகை திட்டங்களின் கீழ் தகுதி இல்லாத குழந்தைகளுக்கு, PM CARES சமமான உதவித்தொகையை வழங்கும்.
சுகாதார காப்பீடு:
- அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் வாழ ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (PM-JAY) கீழ் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். காப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சம்.
- 18 வயது வரை இந்த குழந்தைகளுக்கான பிரீமியம் தொகையை PM CARES ஆல் செலுத்தப்படும்.
மத்திய மாநில அரசுகள் வழங்கி இருக்கும் இந்த சலுகைகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொண்டு சேர்த்து அவர்கள் பயணடைய உதவி செய்வோம்.