எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்
பாரதியாரின் அற்புதமான வரிகள் இவை , அதெப்படி நினைப்பவை எல்லாம் நடக்குமா என்ன ? எண்ணிய எல்லாவற்றையும் செய்ய முடியுமா? எனக் கேட்பவரா நீங்கள் நிச்சயம் முடியும் எப்படி எனத் தெரிந்து கொள்ள இக்கட்டுரையை முழுவதும் படியுங்கள்.
நீங்கள் என்னவாக நினைக்கறீர்களோ அதுவே ஆகின்றீர்கள் என்கிறார் விவேகானந்தர் . எண்ணியவை எல்லாம் நடக்கும் என்கிறது பிரபஞ்ச விதி . அதுவே பிரபஞ்சத்தின் சக்தி. எவற்றை நாம் முழுமனதோடு சிந்திக்கின்றோமோ அவையே நம் வாழ்வில் நிகழத்துவங்குகிறது.
எனவே உங்களது வெற்றியை பற்றி சிந்தியுங்கள் நீங்கள் அடைய நினைக்கும் உயர்ந்த நிலைகளைப்பற்றி சிந்தியுங்கள் அதற்கான பாதையை நமது எண்ணங்களின் சக்தியே உருவாக்கும். எனவே தான் “சிந்தனையும் செயலும் ” என இணைத்து சொல்கிறார்கள்.
நேர்மறை எண்ணங்களோடு சிந்தியுங்கள் . முழுமனதோடு வெற்றி பெறப்போவதாய் கனவு காணுங்கள். கனவு மெய்ப்படும்.
ஒரு குட்டி கதை:
வழிப்போக்கன் ஒருவன் அடர்ந்த காட்டின் வழியே சென்று கொண்டிருந்தான் அப்போது ஓய்வெடுக்க நினைத்து ஆற்றுப்படுக்கையில் இருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஓய்வு எடுத்தான்.
கண் விழித்து பார்த்த போது நீரோடையின் சலசலப்பு அந்திமாலை நேரம் என அந்த இடமே மிக ரம்மியமாக காட்சியளித்தது. அவனது மனம் ஆஹா எத்தனை அழகு இவ்விடத்தில் நமக்கு வீடு இருந்தால் இங்கேயே தங்கிக்கொள்ளலாமே என எண்ணமிட்டது. உடனே “ததாஸ்து” என்று ஒர் குரலோலித்தது. சட்டென அங்கு ஓர் அழகிய வீடு உருவாகியது. வழிப்போக்கனுக்கு மிகுந்த மகிழ்ச்சி நினைத்தவுடன் வீடு வந்துவிட்டதன உற்சாகமாய் வீட்டை சுற்றி வந்தான் .
மெல்ல இருட்ட தொடங்கியது . உடனே அவன் இந்த அடர்ந்த காட்டினுள் நாம் தனியாக இருக்கிறோமே ஏதெனும் விலங்கிற்கு இரையாகி விடுவோமோ என எண்ண தொடங்கினான் மற்றுமொருமுறை “ததாஸ்து” என்ற குரல் ஒலித்தது. புலியொன்று வந்து அவனை இரையாக்கி கொண்டது. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.
ததாஸ்து என்பது ஒரு சமஸ்கிருத வாழ்த்துத் தொடர் ஆகும். இதற்கு
“அங்கனமே ஆகுக”என்பது பொருளாகும். எதை நினைக்கறீர்களோ அதுவே நடக்கும். வெற்றியை பற்றியே சிந்தியுங்கள் நமது எண்ணங்களே வெற்றியை பெற்றுத்தரும்.
“ததாஸ்து”.