Advertisement
அரசியல்இந்தியாகொரோனாமுக்கிய செய்திகள்

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு தமிழ் வடிவம் | 07.06.2021 திங்கட்கிழமை

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் செய்தி வடிவத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Highlights:

  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக இந்திய அரசு வழங்கவுள்ளது
  • மாநிலங்களிடம் உள்ள 25 சதவீதம் தடுப்புமருந்து வழங்கலை இனி இந்திய அரசு எடுத்துக் கொள்ளும்
  • தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை இந்திய அரசு கொள்முதல் செய்து, அவற்றை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கும்
  • பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படுகிறது
  • நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். கடந்த 100 வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர் என்று பெருந்தொற்றை குறிப்பிட்ட அவர், நவீன உலகம் இது வரை கண்டிராத அல்லது அனுபவிக்காத மிகப்பெரிய பெருந்தொற்று இது, இதை எதிர்த்து பல்வேறு முனைகளில் நாடு போரிட்டு வருவதாகவும் கூறினார்.

Advertisement

பிரதமர் வெளியிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள்.

தடுப்புமருந்து வழங்கல் யுக்தியை மறுபரிசீலனை செய்யுமாறும் மே 1-க்கு முன்பிருந்த முறையை மறுபடி செயல்படுத்துமாறும் பல்வேறு மாநிலங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, மாநிலங்களிடம் இருந்த 25 சதவீத தடுப்பு மருந்து வழங்கலை இந்திய அரசு இனி எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்தார்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி

ஜூன் 21-ல் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தடுப்பூசியை இலவசமாக இந்திய அரசு வழங்கும் என்று பிரதமர் மேலும் அறிவித்தார். தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை இந்திய அரசு கொள்முதல் செய்து, அவற்றை இலவசமாக மாநில அரசுகளுக்கு வழங்கும்.

தடுப்பு மருந்துகளுக்கு மாநில அரசுகள் எதுவும் செலவிட வேண்டிய தேவை இருக்காது. கோடிக்கணக்கான மக்கள் இதுவரை இலவசமாக தடுப்பு மருந்தை பெற்ற நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரும் இதில் சேர்க்கப்படுவர். அனைத்து மக்களுக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக இந்திய அரசு வழங்கும் என்று தெரிவித்தார்.

25 சதவீத தடுப்பு மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக வாங்கும் முறை தொடரும் என்றும், தடுப்பூசி விலைக்கு மேல் சேவை கட்டணமாக ரூ 150 ரூபாய் மட்டும் தனியார் மருத்துவமனைகள் வாங்குவதை மாநில அரசுகள் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.

தீபாவளி வரை இலவச ரேசன்

மற்றுமொரு முக்கிய அறிவிப்பாக, பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படுகிறது என்று கூறினார். நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படும். பெருந்தொற்றின் போது ஏழைகளுக்கு ஆதரவாக நிற்கும் அரசு, ஒரு நண்பனாக அவர்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதாக கூறினார்.

ஆக்ஸிஜன் தட்டுப்பாடு

இரண்டாம் அலையின் போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்ததாக குறிப்பிட்ட பிரதமர், போர்க்கால அடிப்படையில் அரசின் அனைத்து அமைப்புகளையும் இயக்கி இந்த சவாலை எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். இந்திய வரலாற்றில் பிராண வாயுக்காக இதுபோன்றதொரு தேவை ஏற்பட்டதில்லை என்று பிரதமர் கூறினார்.

தடுப்பு மருந்தின் அவசியம்

தடுப்பு மருந்துக்கான சர்வதேச தேவையை ஒப்பிடும் போது, அதை தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவென்று குறிப்பிட்ட பிரதமர், இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தடுப்பு மருந்து நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்றார்.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை கடந்த காலங்களில் இந்தியா பெற்றது. இதன் காரணமாக, இதர நாடுகள் தடுப்பு மருந்து நடவடிக்கையை நிறைவு செய்த பின்பும் கூட இந்தியாவால் அதை தொடங்க முடிந்திருக்கவில்லை. ஆனால், கடந்த 5-6 ஆண்டுகளில் துடிப்புடன் செயல்பட்டு தடுப்பு மருந்து வழங்கலை 60-ல் இருந்து 90 சதவீதம் வரை நாம் அதிகரித்திருக்கிறோம் என்று கூறினார். வேகத்தை மட்டுமில்லாது தடுப்பு மருந்து சென்றடையும் அளவையும் நாம் மேம்படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

தூய்மையான எண்ணங்கள், தெளிவான கொள்கை மற்றும் தொடர் கடின உழைப்பின் மூலம் அனைத்து சந்தேகங்களையும் இந்த முறை முறியடித்த இந்தியா, கொரோனாவுக்கான இரண்டு தடுப்பு மருந்துகளை தயாரித்தது என்று பிரதமர் கூறினார். நமது நாட்டு விஞ்ஞானிகள் அவர்களது திறனை நிரூபித்தனர். 23 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் இன்று வரை நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை வெறும் சில ஆயிரங்களில் இருந்த போதே தடுப்பு மருந்து பணிக்குழு உருவாக்கப்பட்டதாகவும், தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைக்கான நிதி மற்றும் தயாரிப்பில் தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனைத்து விதங்களிலும் அரசு ஆதரவளித்தது. பெரும் முயற்சிகள், கடின உழைப்பின் காரணமாக, தடுப்பு மருந்து விநியோகம் வரும் நாட்களில் அதிகரிக்கப்படவுள்ளது. ஏழு நிறுவனங்கள் பல்வேறு வகையான தடுப்பு மருந்துகளை தற்போது தயாரித்து வருகின்றன என கூறினார். இன்னும் மூன்று தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனை முன்னேறிய கட்டத்தில் இருப்பதாகவும், குழந்தைகளுக்கான இரு தடுப்பு மருந்துகள் மற்றும் மூக்கில் செலுத்தும் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மாறுபட்ட கருத்துகள்

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை குறித்து பல்வேறு பிரிவினரிடம் இருந்து வரும் மாறுபட்ட கருத்துகள் குறித்து பேசிய பிரதமர், கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் வேளையில், மாநிலங்களுக்கான தேர்வுகள் குறைவாக இருப்பதாக கேள்விகள் எழுந்தன. மத்திய அரசே ஏன் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று சிலர் கேள்வி எழுப்பினர். ஊரடங்கில் நெகிழ்வுத் தன்மை மற்றும் அனைவருக்கும் ஒரே அளவு பொருந்தாது போன்ற விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வதந்திகளை நம்ப வேண்டாம்

ஜனவரி 16 முதல் ஏப்ரல் இறுதி வரை மத்திய அரசின் கீழே இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை பெரும்பாலும் செயல்படுத்தப்பட்டதாக கூறினார். அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னேற்றம் பெற்றுக் கொண்டிருந்தது, அவர்களது முறை வரும் போது தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் தெரிவித்தனர். தடுப்பு மருந்து வழங்கலை பரவலாக்குவதற்கான கோரிக்கைகளுக்கு இடையே, சில வயதினருக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பது குறித்த முடிவு பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பல விதமான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன, ஊடகங்களின் சில பிரிவுகள் ஒரு பிரச்சாரமாகவே இதை செய்தன. தடுப்பு மருந்து குறித்த வதந்திகளை பரப்புவோரை எச்சரித்த பிரதமர், மக்களின் உயிரோடு அத்தகையோர் விளையாடுவதாகவும், அவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இவ்வாறு பிரதமர் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.