ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2021: இந்திய அணியின் வெற்றியாளர்கள் பட்டியல், இறுதி முடிவுகள் மற்றும் பதக்கங்களின் எண்ணிக்கை
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 31 வது பதிப்பு 2021 மே 24 முதல் 31 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்றது. போட்டியின் வரலாற்றில் ஆண்களும் பெண்களும் ஒரே சாம்பியன்ஷிப்பில் விளையாடுவது இது இரண்டாவது முறையாகும்.
19 வீரர்களுடன் துபாய் சென்ற இந்தியக் குழு 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் நான்காவது இடம் பிடித்தது.
இந்த சாம்பியன்ஷிப்பிற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (AIBA) 4,00,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையாக ஒதுக்கியுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலரும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு முறையே 5,000 மற்றும் 2,500 அமெரிக்க டாலர்களை பரிசுத்தொகையாக வழங்குகின்றன.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் குத்துச்சண்டை கூட்டமைப்பு இணைந்து நடத்திய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 வீராங்கனைகளைக் கொண்ட இந்திய மகளிர் அணியின் அனைத்து வீரர்களும் பதக்கங்களை வென்றுள்ளனர்.
தங்கப்பதக்கம் வென்றவர்கள்:
ஆண்கள் பிரிவில் சஞ்சீத் சிங் (91 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் மற்றும் மூன்று முறை ஆசிய சாம்பியனான கஸ்காக் குத்துச்சண்டை வீரர் வஸிலி லெவிட்க்கு எதிராக சஞ்சீத் 4-1 என்ற வெற்றியைப் பதிவு செய்தார்.
பெண்கள் பிரிவில், பூஜா ராணி (75 கிலோ) உஸ்பெகிஸ்தானின் மவ்லுடா மோவ்லோனோவாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே 81 கிலோ பிரிவில் பூஜா 2019 ல் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டும் தங்கம் வென்றதால் தொடர்ச்சியாக இரண்டு முறை தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.
வெள்ளி பதக்கம் வென்றவர்கள்:
ஒலிம்பிக்கிற்குச் செல்லும் குத்துச்சண்டை வீரர்கள் அமித் பங்கல் (52 கிலோ) மற்றும் சிவா தாபா (64 கிலோ) அந்தந்த இறுதிப் போட்டிகளில் தோல்விகளை சந்தித்த பின்னர் வெள்ளியுடன் தங்கள் பிரச்சாரத்தை முடித்தனர்.
ஐந்து முறை ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம் (51 கிலோ), லல்பூட்சாய்ஹி (64 கிலோ), அனுபாமா (+ 81 கிலோ) ஆகியோரும் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
வெண்கலப் பதக்கம் வென்றவர்கள்:
பெண்கள் பிரிவில் சிம்ரான்ஜித் கவுர் (60 கிலோ), லோவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), ஜெய்ஸ்மைன் (57 கிலோ), சாக்ஷி சவுத்ரி (54 கிலோ), மோனிகா (48 கிலோ), சவீதி (81 கிலோ) வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் விகாஸ் கிரிஷன் (69 கிலோ) மற்றும் வருந்தர் சிங் (60 கிலோ) வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
#AsianEliteBoxingChampionships