ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2021: துபாயில் நேற்று துவங்கியது. இந்தியாவை வழிநடத்தும் அமித் பங்கல் மற்றும் மேரி கோம்
துபாயில் நேற்று மே 24 திங்கட்கிழமை துவங்கிய ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2021 போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஏழு இந்திய குத்துச்சண்டை வீரர்கள், எம்.சி மேரி கோம் மற்றும் அமித் பங்கல் உட்பட மொத்தம் 19 பேர் துபாய் சென்றுள்ளனர்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் முன்னதாக புதுதில்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் இந்தியாவில் COVID-19 நிலைமை காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டது.
இந்திய பட்டியலில் ஆண்கள் பிரிவில் விகாஸ் கிரிஷன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), அமித் பங்கல் (52 கிலோ) மற்றும் லோவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ), பெண்கள் பிரிவில் பூஜா ராணி (75 கிலோ), எம்சி மேரி கோம் (51 கிலோ) மற்றும் சிம்ரான்ஜித் கவுர் (60 கி.கி) ஆகியோர் ஏற்கனவே டோக்கியோவுக்கு தகுதி பெற்றவர்கள்.
டோக்கியோவிற்கு செல்லவிருந்த இரண்டு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் மணீஷ் கௌசிக் (63 கிலோ) மற்றும் சதீஷ் குமார் (+ 91 கிலோ) மட்டுமே துபாயில் இல்லை, ஏனெனில் இருவரும் கோவிட் -19 ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக ஒலிம்பியன் சிவா தாபா மற்றும் நரேந்தர் துபாய் சென்றுள்ளனர்.
ஆசிய சாம்பியன்ஷிப்புகள் இந்த ஜூலை மாதம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட மிகப்பெரிய குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றாகும்.
2019 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் 23 வயதான வினோத் தன்வார். ஆரம்பத்தில் இவர்தான் ஆண்களின் 49 கிலோ பிரிவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார், ஆனால் கொரோனா சோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்ததால் அவரும் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (BFI) மாற்று வீரர் பெயரை வெளியிட மிகவும் தாமதமானது, அதனால் இந்த ஆண்டு ஆண்களின் 49 கிலோ பிரிவில் இந்தியாவுக்கு பிரதிநிதித்துவம் இருக்காது.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா 13 பதக்கங்களை வென்றது. அவற்றில் இரண்டு தங்கம், அமித் பங்கல் மற்றும் பூஜா ராணி வென்றது. அதேபோல் இந்த ஆண்டும் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வெள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.