Advertisement
சமூகம்சினிமா

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ ஒளிபரப்பானால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்! – சீமான்

மே 19 ஆம் தேதி தி ஃபேமிலி மேன் சீசன் 2 வலைத் தொடரின் ட்ரெய்லரை ட்விட்டரில் அறிமுகப்படுத்திய மனோஜ் பாஜ்பாய் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். தமிழகத்தை மோசமான பார்வையில் சித்தரித்ததாக குற்றம் சாட்டி இந்தத் தொடரை ‘தமிழ் எதிர்ப்பு’ என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

ஆன்லைனில் வெளிவந்த டிரெய்லரில், சமந்தா நடித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு கற்பனையான தீவிரவாதத் தலைவரான ‘ஆபத்தின் புதிய முகம்’ என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீகாந்த் திவாரி (பாஜ்பாய்) நடித்துள்ளார். #ShameOnYouSamantha மற்றும் #FamilyMan2_against_Tamils போன்ற ஹேஷ்டேக்குகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து ட்விட்டரில் டிரென்டிங்‌ ஆக தொடங்கின. டிரெய்லரைப் பார்த்த பிறகு கொதித்தெழுந்த டிவிட்டர் வாசிகள் மற்றும் தமிழ் இன ஆர்வலர்கள் தொடர் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஃபேமிலி மேன் 2 க்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பிய மக்கள், சமந்தாவின் போர்க்குணமிக்க தன்மை ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்படுவதாகவும், தமிழ் சமூகம் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதாகவும் காட்டப்பட்டுள்ளது என்கின்றனர்.

Advertisement
Family Man 2 Tamil

இது தொடர்பாக டிவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

அமேசான் பிரைம் இணையத்தளத்தில் ஜூன் 4 ல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி. அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல.

ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும். சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களைத் தவறாகத் தோற்றம் கொள்ளச்செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிற இத்தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும், கொந்தளிப்புடனும் எதிர்வினையையும், கண்டனத்தையும் பதிவுசெய்து வருகின்றனர்.

சிங்களப்பேரினவாத ஆட்சியாளர்கள் போர் மரபுகளையும். விதிகளையும் மீறி உலக நாடுகளின் துணையோடு உள்நாட்டுப்போரை நடத்தி நச்சுக்குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்றொழித்தபோதும் சிங்கள மக்கள் மீது சிறுதாக்குதல் கூடத் தொடுக்காது மரபுவழிப் போரையே இறுதிவரை முன்னெடுத்து, அழிவைச் சந்தித்தபோதும் அறவழிலிருந்து வழுவாது நின்ற விடுதலைப்புலிகளின் மாண்பைப் பேசாது அவர்களை ஈவிரக்கமற்ற வன்முறைக்கூட்டம் போலக் காட்ட முயலும் இத்தொடரை இணையவெளியில் ஒளிபரப்புவதை ஒருநாளும் ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Family Man 2 Tamil

ஆகவே. அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது. தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Family Man 2 Tamil

ஏற்கனவே மிகத்தவறாக எடுக்கப்பட்ட ‘மெட்ராஸ் கபே’ போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாமல் அவை ரத்து செய்யப்பட்டது போல, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்.

அதனைச் செய்ய மறுத்து. ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு திரு. சீமான் தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

தி ஃபேமிலி மேன் 2 டிரெய்லர் (ஆங்கிலம்) பார்க்காதவர்கள் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.