தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்த வார தொடக்கத்தில் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ஆம் வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஜூன் 3வது வாரத்தில் இருந்து தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
11 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை அதிகம் வரும் நிலையில் கோவிட்-19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.
அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று அரசு முன்னதாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து பலர் அதிக எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் இதுகுறித்து பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கூறும் திமுக பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணை வழங்கியிருப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டை போலவே தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 11-ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான தேர்வு நடத்தப்படும் என்று கூறிய உத்தரவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே 11-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கூறியுள்ளது.