சக மல்யுத்த வீரர் சாகர் ராணா என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவின் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் இன்று காலை டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தேசிய தலைநகரில் முண்ட்கா பகுதியைச் சேர்ந்த சக குற்றவாளியான அஜய் மற்றும் சுஷில் குமார் இருவரும் கைது செய்யப்படடனர்.
டெல்லியில் சத்ராசல் மைதானத்தில் 23 வயது மல்யுத்த வீரர் இறந்த சம்பவத்தில் சுஷில் குமார் ஈடுபட்டதாக பொலிசார் தேடி வந்தனர்.
போலீஸ் கூற்றுப்படி, சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சக மல்யுத்த வீரர் சாகர் ராணா, 23, மற்றும் அவரது இரண்டு நண்பர்களை மே 4 அன்று டெல்லி சத்ராசல் ஸ்டேடியத்தில் தாக்கினார்கள். தாக்குதலுக்கு பிறகு சாகர் ராணா மற்றும் இரண்டு நண்பர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த திரு ராணா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் நடந்த மே 4 முதல் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் சுஷில் குமாருக்கு கடந்த வாரம் டெல்லி போலீசார் தகவல் தருபவருக்கு ரூ .1 லட்சம் ரொக்கம் வெகுமதியாக அறிவித்திருந்தனர்.
சாம்பியன் மல்யுத்த வீரரைக் கைது செய்ய டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் பல இடங்களில் போலீசார் சோதனைகளை மேற்கொண்டனர். இறுதியில் இன்று காலை அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சுஷில் குமார் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தையும் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.