சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறப்பு கட்டுரை | World Environmental Day
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் அதற்கென ஒரு சுற்றுச் சூழலை கொண்டுள்ளது. பூச்சிஇனங்கள், பறவையினங்கள், விலங்குகள், மனிதர்கள் என பற்பல உயிரினங்களும் அதற்கென ஒரு சூழலை கொண்டு அதனுள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக சுற்றுச்சூழல் என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்கையையே பெரிதும் குறிக்கிறது.
உலக சுற்றுசூழல் தினம் ஜூன் 5
உலகச் சுற்றுச்சூழல் தினம் வருடம் தோறும் ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பூமியையும் அதன் இயற்கை சூழலையும் காப்பாற்றவும் அதற்கான விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்தவும் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் தினம் 1972ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டது.
நோக்கம்
மனிதர்களாகிய நாம் செய்யும் தவறுகளால் நமது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது நாம் அறிந்ததே, அதனால் நம்மைச் சுற்றி நிகழும் பருவநிலை மாற்றங்களும் நாமறிந்ததே. புவி வெப்பமயமாதல், காடுகளை அழித்தல், கரிமிலவாயு என நம்முடைய சுற்றுச்சூழல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அதன் விளைவுகளும் பாதிப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
நமது சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதற்கான முக்கிய நோக்கமாகும்.
கருப்பொருட்கள்
ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கென ஒரு பரப்புரையும் ஒரு கருப்பொருளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதுவரை பரப்பப்பட்டுள்ள கருப்பொருட்களும் வருடங்களும் சிலவற்றைக் காண்போம்.
2013: சிந்தி; உண்; சேமி
2015: 7 பில்லியன் கனவுகள்; ஒரே கோள்; விழிப்போடு நுகர்
2009: உன் கோள் உன்னை கேட்கிறது, காலநிலை மாற்றத்தை மாற்ற இணை-
2010: பல உயிரினங்கள் ஒரே கோள் ஒரே எதிர்காலம்
2020: பல்லுயிர் பெருக்கம்
2021: சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு
உலக ஐக்கிய நாடுகள் சபை 2021 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளாக “சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு” என்பதை அறிவித்துள்ளது. இதன் நோக்கம் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அதனை சரி செய்வது; பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அவற்றை தவிர்ப்பது அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று அறிவித்துள்ளது
சிறு துளிகள் சேர்ந்துதான் பெருவெள்ளம் உருவாகும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் மேற்கொள்ளும் சிறு முயற்சியும் பெரிய பலனைத்தரும்.