`அ.தி.மு.கவில் தனிமனித துதிபாடல்களுக்கு இடமில்லை’ `தங்களின் ஆசைக்கும் தேவைக்கும் கட்சியை பயன்படுத்துவதற்கும் இடமில்லை’
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களில் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க 65 இடங்களில் வென்றது. இதையடுத்து, அ.தி.மு.கவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரிடையேயும் போட்டி நிலவியது. சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவு இ.பி.எஸ் பக்கம் இருந்ததால், அவரே எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிருப்தியில் இருந்தனர்.
அறிக்கை போர்:
இதன்பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை மூலம் பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினார். இதனை ரசிக்காத எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அரபிக் கடலில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் பிரதமருக்கு அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை எழுதினார். தான் எதிர்க் கட்சித் தலைவர் என்பதைச் சுட்டிக் காட்டவே பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியாக பேசப்பட்டது.
இந்த அறிக்கைப் போர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இருவரின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் தனித்தனியாகக் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். சிலர், எடப்பாடியை மட்டும் புரமோட் செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டினர். இதனைக் கவனித்த ஓ.பி.எஸ் தரப்பினரும் தங்கள் தலைமையை உற்சாகப்படுத்தும் கருத்துகளை வெளியிட்டனர்.
இது பொதுவெளியில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதில் `எடப்பாடி பேரவை’ என்றெல்லாம் சிலர் இயங்கத் தொடங்கினர். இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 23ஆம் தேதி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
எண்ணிலடங்கா கொள்கை வீரர்களின் ரத்தம் சிந்திய தியாகத்தாலும், வியர்வை சிந்திய உழைப்பாலும் உருவான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ் மக்களின் உயர்வும், தமிழ் நாட்டின் வளர்ச்சியும், சமத்துவ, சகோதர சமூகத்தினைப் படைக்கும் உன்னத நோக்கமும் தான் நம் இயக்கத்தின் இலக்குகள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் தான் நேற்றும், இன்றும், நாளையும் நமக்குத் தலைவர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனி மனித துதிபாடல்களுக்கோ, தங்கள் ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை. எங்களது பெயர்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக, அச்செயல்களால் தாங்கள் வருத்தப்படுகிறோம்; வேதனைப்படுகிறோம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைக்க விரும்புவோர் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துங்கள். அரசியலில் ஆர்வம் கொண்டு மேலெழுந்துவர் விரும்புவோர் அறிவிலும், ஆற்றலிலும் அக்கறை கொண்டு, உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கூறியதுபோல “மக்களிடம் செல்லுங்கள்; மக்கள் சொல்வதைக் கேளுங்கள்; மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்’”. தலைமைப் பண்பும், தகுதியும் தானாக உங்களைத் தேடிவரும்.
கழகத் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது; கழகத் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையிலும், சிலரது பெயர்களையும், படங்களையும் சிதைத்து அநாகரீகமான தகவல்களையும், உண்மைக்கு மாறான செய்திகளையும், சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வெளியிடுவது; அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும், புரியாமையாலும் கழகத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்து மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயணம் குறித்தும், கழகத்தின் நிலைப்பாடுகள் பற்றியும், கழக நிர்வாகத்தை விமர்சித்தும், வெகுஜன ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ, கழகப் பொறுப்பாளர்களோ, கழகத்தில் உள்ளவர்களோ யாரும் எத்தகைய கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடக்கூடாது.
கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் மேற்கண்ட செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
“அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்”
என்ற வள்ளுவரின் அறிவுரையை ஏற்று, கழக உடன்பிறப்புகள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் காலத்தில் ஜெயலலிதா பெயரில் பேரவை என்ற ஒன்றை சிலர் தொடங்கினர். இதை வளரவிடுவது சரியல்ல என்ற காரணத்தினால், அவ்வாறு பேரவையை தொடங்கியவர்களை கட்சியை விட்டு எம்.ஜி.ஆர் நீக்கினார். அந்த வரிசையில் இன்று ஓ.பி.எஸ் பெயரிலும் இ.பி.எஸ் பெயரிலும் சிலர் பேரவைகளைத் தொடங்கியுள்ளனர். அதைத்தான் அறிக்கைகளில் குறிப்பிட்டு ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் நிர்வாகிகளை எச்சரித்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சிகளில் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கையானதுதான். அதுவும் அ.தி.மு.க போன்ற இரட்டைத் தலைமை உள்ள கட்சியில் நிச்சயம் இது அதிகமாகவே இருக்கும். யார் எதிர்க்கட்சித் தலைவராவது என்பதில் எடபபாடி- ஓ.பி.எஸ் இடையில் வெளிப்படையான மோதல் வெடித்தது. இதனால், இப்போதும் கட்சிக்குள் யார் எந்தப் பக்கம் என்ற விவாதம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில்தான் இந்த வாய்ப்பூட்டு போடும் அறிக்கையை அ.தி.மு.க தலைமை வெளியிட்டுள்ளது. இரண்டு பேரின் கூட்டுத் தலைமையில் இருக்கும் பிரச்னைகளை மேல்மட்டத்தில் சரிசெய்தாலே, கீழ்மட்டத்தில் எல்லாம் சரியாகிவிடும். அதை நோக்கிய பயணமே அதிமுக விற்கு நல்லது. இந்த அறிக்கையை வலிமையான தலைவர்கள் விடுக்கும்போதுதான் செல்லுபடியாகும். இதை எந்த அளவுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் சீரியஸாக பொருட்படுத்துவார்கள் என்பது போகப் போகத்தான் தெரியும்.