ஹோட்டல்களில் கோவிட் தடுப்பூசி போடப்படுவதை தடுக்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் தங்கும் விடுதிகள் (Hotels) கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்! இத்தகைய நடவடிக்கைகள் தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் விதிகளுக்கு முரணானவை, இத்தகைய செயலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
– மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன்
மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில் கூறியதாவது:
சில தனியார் மருத்துவமனைகள் சில ஹோட்டல்களுடன் இணைந்து கோவிட் தடுப்பூசிக்கான தொகுப்பை வழங்குகின்றன என்பது மத்திய சுகாதார அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது, இது தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு எதிரானது.
கோவிட் தடுப்பூசி வழிகாட்டுதல்களின்படி பின்வரும் நான்கு மையங்களில் மட்டுமே கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
- அரசு கோவிட் தடுப்பூசி மையம்.
- ஒரு தனியார் மருத்துவமனை நடத்தும் தனியார் கோவிட் தடுப்பூசி மையம்.
- அரசு மருத்துவமனைகளால் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் தடுப்பூசி மையம், தனியார் மருத்துவமனைகளால், தனியார் நிறுவனங்களில் நடத்தப்படும் கோவிட் தடுப்பூசி மையம்.
- வயதான மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கான வீட்டு கோவிட் தடுப்பூசி மையம்.
குழு வீட்டுவசதி சங்கங்கள், ஆர்.டபிள்யூ.ஏ அலுவலகங்கள், சமூக மையங்கள், பஞ்சாயத்து பவன், பள்ளிகள் / கல்லூரிகள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றில் தற்காலிக அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு வேறு வழிகள் எதுவும் இல்லை. எனவே நட்சத்திர ஹோட்டல்களில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி, வழிகாட்டுதல்களுக்கு முரணானது மற்றும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக தொடங்கப்பட வேண்டும்.
எனவே, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தேசிய கோவிட் தடுப்பூசி இயக்கம் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்கவும் உறுதிப்படுத்தவும் அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.