ரெம்டெசிவிர் மருந்து வாங்க இனி அலைய தேவை இல்லை!
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கும் முறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதில் மாற்றங்கள் மேற்கொள்ள அவர் உத்தரவுப்படி தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும், தற்போதுள்ள முறையை மாற்றி, மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே இந்த மருந்தை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
18ம் தேதி முதல்
இதன்படி, வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரம், மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பின், அந்த மருத்துவமனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்கு சென்று ஒதுக்கீடு செய்யப்படும் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு வழங்கப்படும் மருந்துகள் தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும், பெறப்படும் அதே விலையிலேயே நோயாளிகளுக்கு அவை விற்பனை செய்யப்படுவதையும், தவறான முறையில் கள்ளச் சந்தையில் இவை விற்பனை செய்யப்படாதவாறும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் மருந்துச் சீட்டு அளிக்கும் மருத்துவனைகள் மீதும், மேற்கூறிய விதிமுறைகளை மீறுவோர் மீதும், சட்டப்படியான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் இனி ரெம்டெசிவிர் மருந்து வாங்க இனி அலைய தேவை இல்லை.
மேலும் இதுபோல அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையுங்கள் https://t.me/Tamil24Newsin