Advertisement
தமிழ்நாடுபள்ளிக்கல்விமுக்கிய செய்திகள்

+2 மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் அறிவிப்பு | TN Board exam cancelled

Highlights:

  • மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து
  • தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது, தொற்றினை அதிகரிக்கச் செய்யலாம்.
  • தேர்வினை மேலும் தள்ளிவைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும்
  • மதிப்பெண் வழங்குவது குறித்து பரிந்துரைகளை வழங்கிட குழு அமைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

பொதுத்தேர்வு ரத்து

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார்கள்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Advertisement

மத்திய அரசும் CBSE பொதுத்தேர்வும்

இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக, மத்திய அரசு CBSE பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ஏற்கெனவே ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களும் இதே காரணத்திற்காக, தத்தமது மாநில பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளன.

ஆலோசனையில் ஆதரவும் எதிர்ப்பும்

பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து, பள்ளியளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

பல்வேறு தரப்பினரும் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மன நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கின்றர்.

மாணவர்களின் நலனே முக்கியம்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் தீவிரமாக இருந்து வருகிறது, இதைத் தொடர்ந்து மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதுள்ள விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்ற நடைமுறை உள்ளதால் அந்த வயதுக்குக் குறைவான, தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது, தொற்றினை அதிகரிக்கச் செய்யும் என்றும் வல்லுநர்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

மாநில கல்வித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பினும், தேர்வினை மேலும் தள்ளிவைப்பது, மாணவர்களை மனதளவில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்று மருத்துவர்கள் கருதுவதால், அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.

மதிப்பெண்கள் வழங்க குழு

இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும்.

இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். இந்தக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.

கல்லூரி சேர்க்கை

அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழகத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.